பிரம்மன் அனைத்து மிருகங்களையும் படைத்தபின் அவற்றை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நெஞ்சில் ஒரு நகைப்பு எழுந்தது. சிவனும் விஷ்ணுவும்கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு பிறவியைப்படைக்க எண்ணினார். அவர்கள் யுகயுகமாக அப்பிறவியுடன் ஆடி சலிக்கவேண்டும். அப்பிறவியை தாங்களும் அடைந்தாலாவது அதைப்புரிந்துகொள்ளமுடியுமா என்று முயலவேண்டும். அப்போதும் புரிந்துகொள்ள முடியாமல் பிரம்மனை எண்ணி வியக்கவேண்டும்.”
“அதன்பொருட்டு அவர் உருவாக்கியவன் மனிதன்” என்றான் பீமன். “மானில் ஒருபகுதியையும் வேங்கையில் ஒருபகுதியையும் இணைத்து அவனைப்படைத்தார். பாம்பில் ஒருபகுதியையும் பறவையில் ஒருபகுதியையும் அதிலிணைத்துக்கொண்டார். ஆகவேதான் எப்போதும் வேட்டையாடுகிறான், வேட்டையாடவும் படுகிறான். சேர்ந்து வாழ விழைகிறான். உடனிருப்பவர்களை உண்ணவும் எண்ணுகிறான். விண்ணில் பறந்து விட்டு மண்ணிலிறங்கி பொந்துக்குள் சுருண்டுகொள்கிறான்."