"நல்லவனகிய நான்" என்று ஆரம்பிக்க வேண்டிய இந்த கதை, எனக்கு சுய தம்பட்டம் பிடிக்காது என்பதால், நான் இன்றைய வேலையை முடித்தவுடன் என்று ஆரம்பிக்கிறது.
தட்டில் இருந்த கடைசி துண்டு பர்கரை முழுங்கி விட்டு கம்ப்யூட்டர் யை shutdown செய்யும் பொழுது நேரம் 9.00 மணி. அந்நேரத்திலும் அங்கங்கே சிலர் கம்ப்யூட்டர் திரையை உற்று பார்த்துக் கொண்டு இருந்தனர். பெண்கள் சிலர் மொபைலை காதில் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர்-ல் சாட் செய்து கொண்டு இருந்தனர்.
பார்க்கிங்கில் இருந்த காரை எடுத்துக்கொண்டு, செக்யூரிட்டி-ன் சலாமை சின்ன தலையசைப்பில் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி பயணம். சென்னையின் டிராபிக் சற்றே குறைந்திருந்தது. உள்ளே மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என இளையராஜா கொஞ்சிக் கொண்டு இருந்தார். வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் 9.00 மணிக்கு மேல் தான் வீடு திரும்பும் எண்ணமே வருகிறது.
சென்ற வாரத்தில் அப்படித்தான், உடனடியாக முடிக்க வேண்டிய வேலைகள் ஏதும் இல்லாததால் 5 மணிக்கே திரும்பிவிட்டேன். முழு ஆட்டையும் முழுங்கிவிட்டு நகரும் மலைப்பாம்பு போல் ( மலைப்பாம்பு ஆட்டை முழுங்குவதை நான் பார்த்தது இல்லை, நீங்கள்) டிராபிக்-ல் நகர்ந்து, 6.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்து என்ன செய்வது என்பது புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன்.
குழந்தைகள் வீட்டுப் பாடத்தில் பிஸி. மனைவி டியூஷன் டீச்சராக, வாடகை வாங்க வந்த வீடு
ஓனரை பார்க்கும் முக பாவத்துடன் நோக்கினாள்.
நானும் உடை மாற்றிக் கொண்டு இன்டர்நெட்டில் முகநூல் பக்கங்களை எல்லாம் மேய்ந்து விட்டு, பார்க்கும் எல்லா போஸ்டுக்கும் லைக், கமெண்ட் செய்து ( இல்லை என்றால் போன் போட்டு திட்டுகிறார்கள்), இலக்கிய சண்டைகள் சிலவற்றை மேய்ந்து என் மேலான கருத்துகளை பதிந்து விட்டு நிமிரவும், மனைவி "ஏங்க தோசை வார்க்கட்டுமா ? " என்று கேட்கவும் சரியாக இருந்தது. மணி 9.30. அன்றிலிருந்து வேலை இல்லாவிட்டாலும் திரும்பும் நேரம் மாறிவிட்டது.
"மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்" என ஜேசுதாஸ் கமெண்ட்ரி சொல்லிக் கொண்டு இருந்தார். கார் மத்ய கைலாசை கடந்தது. குறைந்து விட்ட டிராபிக்-ல் சீரான வேகத்தில் செலுத்தி வீட்டை அடையும் பொது மணி 10.05. மாலு போன் பேசிக்கொண்டு இருந்தாள் . முகம் கழுவி, உடை மாற்றி சாப்பாட்டு மேசையில் உட்காரும் போதே, சப்பாத்தியும் கோழி குருமாவும் என் உற்சாகத்தை அதிகரித்தது. "O K அப்புறம் பேசுகிறேன்" என வழக்கமான சம்பாசனையை சொல்லி போனை கட் செய்து பரிமாற வந்தாள்.
மாலையில் தான் குளித்திருப்பாள் போல. மெலிதான ஜாஸ்மின் சென்ட்டின் வாசனை, உடனடியாக அவளை பற்றி ஒரு கவிதை பாட வேண்டும் ( அடுத்த நாள் FB -ல் status update) என்ற என் சிந்தனை குதிரை தறிகெட்டு ஓட, லகானை இழுத்துப் பிடித்தது என் மொபைலின் கால் . எதோ ஒரு புதிய நம்பர்.
"hello..." என்றது பெண் குரல்.
"yes... may I know who is calling?" ஆங்கிலத்தில் ஏன் பேசினேன் எனத் தெரியவில்லை.
"சார், நான் உங்க ஆபீஸ்ல தான் வொர்க் பண்றேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் " என்றாள். கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசியதாகத்தான் பட்டது.
மாலுவின் முகத்தை பார்த்துக்கொண்டே பால்கனிக்கு வந்து விட்டேன். நான், மொபைல், மாலுவின் காது மூன்றும் ஒரே கவனத்தில்.
"சொல்லுமா என்ன வேணும்".
"இல்லை சார், உங்ககிட்ட ஒன்னு கேக்கணும். நீங்க கோவிச்சு குவிங்கலோனு பயம்மா இருக்கு."
"ம்...ம்... சொல்லுங்க "
"சார், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ், team mate கிட்ட பழகுற விதம், எந்த பிரச்சனையையும் deal பண்ற method, really super sir "
"எதுவா இருந்தாலும் காலையில் ஆபீஸ்-ல என் டேபிளுக்கு வாம்மா", எரிச்சலான குரலிலே சொல்லி வலுகட்டாயமாக கட் செய்தேன். மெல்லிய பதட்டம் என்னுள். யாராய் இருக்கும் என்ற சிந்தனை. இந்த வரியை படித்து போல், "யாருங்க போனிலே?" - மாலு.
"ஆபிஸ்-ல இருந்து யாரோ ஒரு பொண்ணு. பாரேன் 10.30 க்கு போன் பண்ணி, மொட்டையா பேசுது. நாளைக்கு ஆபீஸ்-ல வந்து பார்க்க சொல்லிட்டேன்."
"ஏன்... என்னன்னு கேட்டு இங்கேயே முடிக்க வேண்டியது தானே", கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது மாலுவின் குரலில்.
"இல்ல மாலு... அது எடா கூடமா எதாவது கேட்டுட்டா.... தப்புல்ல."
"நீங்களே எடா கூடமா எதாவது பேசணுமுன்னு எதிர் பார்க்கிற மாதிரி தெரியுது"
"ஜோக்கடிக்கிற மாலு. ஆபீஸ்-ல எதாச்சும் தப்பு பண்ணியிருக்கும். வீட்டிலே பேசுனா, recommend பண்ண சொல்லலாமுன்னு போன் பண்ணியிருக்கும். நான் பாத்துகிறேன் "
மாலு பாதி சமாதானத்துடன் சப்பாத்தியை தொடர்ந்தாள். நானும்.
இரவில் கொஞ்ச நேரம் ஆபீஸ் வேலை பார்ப்பது என் வழக்கம். அனால் அப்படி உட்கார்ந்தால் மாலு நிச்சயம் மீண்டும் ஆரம்பிப்பலொ என்று தூங்கச் சென்றேன். இரவில் எனக்கு வந்த கனவை இங்கே சொன்னால், கதையின் ஹீரோவை வில்லனாக பார்க்கும் அபாயம் உள்ளதால், கனவு கட்.
மறுநாள் காலை மணி 10.00 office -ல் நுழையும் போதெ துப்பறியும் மனநிலையில் தான் இருந்தேன். யார் யார் என்னை கவனிகிறார்கள், அதுவும் பெண்கள் என்று பார்த்தேன். கிட்டதட்ட எல்லா பெண்களும் என்னையே பார்ப்பதாக பட்டது. ( நான் கொஞ்சம் handsom ... அதுதான்) என் இருக்கையில் அமர்ந்து mail களை check செய்வதாக பாவனை செய்து கொண்டே போன் பார்ட்டி வந்து பேசுவாள் என்று எதிபர்த்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மெயிலில் இருந்த ஆபீஸ் கவலைகள் வெளியேறி என் கவனத்தை முழுவதும் ஆக்கிரமிக்க ஆரம்பித்ததில் அவளை மறந்தேன்.
மதியம் லஞ்ச் முடித்து விட்டு நேற்று வந்த நம்பர்-க்கு டயல் செய்தேன். யாருக்கு ரிங் போகுது என பார்த்தேன். இரண்டாவது ரிங்கில் கட் ஆனது. என் இதயத் துடிப்பு அதிகமாகியது. அனாவசியமாக, குழந்தைகளின் நினைவும் பெரியவனுக்கு வயது 11 என்பதும் நினைவுக்கு வந்தது.
யாராவது என் காபினை பார்கிறார்களா என்று பார்த்தேன். அன்று ஏனோ எல்லோரும் sincere - ஆக வேலை செய்வதாக பட்டது. எனக்குள் எதோ ஒன்று நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு. சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டுவிட்டு பச்சை பட்டனை தேய்த்தேன்.
"சார் ...." என்றது ஹஸ்கி வாய்ஸ்.
"என்னம்மா என்னை வந்து பார்க்க சொல்லி இருந்தேன்?"
" இல்ல சார் ... நீங்க ... விவேக் சார் திட்டுவார்னு..." கோர்வையாக இல்லாமல் வார்த்தைகள் தனித்தனியாக வந்தது.
" கட் பண்ணிட்டு என் டேபிள்-கு வாங்க " அதிகம் கடுமை இல்லாமல் கட் செய்தேன்.
காலேஜ் நாட்களில் மாலுவிடம் love சொல்லும் போது கூட இவ்வளவு தவித்தது கிடையாது. literal -ஆக வியர்திருந்தேன். காபின் கதவையே பார்த்திருந்தேன் .
ர் .... ர் .... என்றுமே சப்தம் செய்யாத காபின் கதவு இன்று மெலிதாக சிணுங்குகிறது.
"Excuse me... Sir" வெண்ணையில் வழுக்கியது குரல் என்று தான் எழுத வேண்டும் என்று ஆசை. ஆனால் வழக்கம் போல் சுமாராகத்தான் இருந்தது. சராசரியை விட கொஞ்சம் குள்ள உருவில் உள்ளே வந்தாள். டைட்டான ஜீன்சும் மேலே லூசன பனியனும் அணிந்த பெண்கள் பலர் எங்கள் ஆபீசில் இருந்தாலும் இவள் என்னோவோ கருப்பில் மெல்லிய ஊதா நிற கோடுகள் போட்ட சுடிதார் அணிந்திருந்தாள்.
"வாம்மா... நீ தான் எனக்கு போன் செய்ததா ? உன் பெயர்?
"சந்தியா "
"ம் ... எந்த ப்ராஜெக்ட்-ல இருக்கீங்க?"
"சார் ... நான் விவேக் சார் குரூப்"
"ஒ... அந்த கனடா ப்ராஜெக்ட். Good சொல்லுங்க என்ன பிரச்சினை?"
"இல்ல சார் .... வந்து... உங்க behaviour , நீங்க உங்க ஜூனியர் கிட்ட நடந்துக்கிற முறை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் ."
" ம்... "
" சார்... நான் உங்க குரூப் க்கு transfer ஆகனும் சார் . விவேக் சார் ப்ரொஜெக்டில் ஸ்ட்ரெஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அவர் உங்க அளவுக்கு ஜோவியலா இல்ல சார் ." ( ஆமாம். அவன் என்னை விட கொஞ்சம் நிறம் கம்மி)
"No .. No ... விவேக் ப்ராஜெக்ட்ல நல்ல ஸ்கோப் இருக்கு. இதெல்லாம் சின்ன ஸ்ட்ரெஸ். manage பண்ண கத்துக்கணும். ok . நான் வேணுமின்னா விவேக் கிட்ட பேசவா?"
"வேண்டாம் சார்... சான்ஸ் இருந்தா எனக்கு favour பண்ணுங்க. thankyou sir "
******
இரண்டு மாதம் நீண்ட வெளிநாட்டு பயணத்திற்கு பின் office நுழைந்த
எனக்கு, என் டீமில் சந்தியா வேலை செய்து கொண்டு இருந்தது ஒன்றும் ஆச்சர்யம்
அளிக்கவில்லை .
அனாவசியமாக கதையின் முதல் வரியோடு இதை தொடர்பு படுத்தி பார்க்கும் உங்களை பார்த்தால் தான் வெறுப்பாக இருக்கிறது.